×

‘8 வாரத்திற்கு பிறகே வெளியிட வேண்டும்’ - திடீர் கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் !

 

எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிடலாம் என்ற விதிமுறை உள்ளது. அதனால் எப்படிப்பட்ட வெற்றி படங்களாக இருந்தாலும் திரையரங்கில் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியாகிறது. 

திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படத்தை 4 வாரங்களில் ஓடிடியில் வெளியிட்டால் வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்கள் கழித்து வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இது கலந்தாலோசிக்க வருமாறு தயாரிப்பாளர் சங்கத்திற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சமீபகாலமாக திரைப்படங்களை ஓடிடியில் படங்களை திரையிடுவதால் திரையரங்குகள், தயாரிபாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே ஓடிடியில் திரைப்படங்களை வெளியீடு செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்க வேண்டியுள்ளதால் ஒரு கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தாங்கள் தங்களுக்கு வசதியான தேதியை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.