×

விஜய் சேதுபதி 1 லட்சம் கொடுத்தார்.. நான் சம்பாதித்தது இதுதான் - போண்டாமணி உருக்கமாக பதிவு.. 

 

சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணி,  தனக்கு உதவி செய்பவர்களுக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் போண்டாமணி.  காதீஸ்வரன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் ஒரு இலங்கை தமிழராவார்.  1991ஆம் ஆண்டு பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான போண்டாமணி,  இதுவரை 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். அத்துடன்  மருதமலை, வின்னர், வேலாயுதம் உள்ளிட்ட  படங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் போண்டா மணிக்கு இரண்டு கிட்னி செயலிழந்துவிட்டதாகவும்,  சென்னை ஓமந்தூரர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் , அவருக்கு உதவி தேவைப்படுவதாகவும்  நடிகரும்,  போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின் கண்ணீர் மல்க அண்மையில் வீடியோ ஒன்றை  வெளியிட்டு கோரிக்கை வைத்தார். இதனையடுத்து  நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், நடிகர் போண்டாமணியை நேரில்  சந்தித்து நலம் விசாரித்தார்.  முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்  அவருக்கு மருத்துவ உதவிகள் செய்து தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். அதன்பிறகு  தொடர்ந்து நடிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் பலர் அவரை சந்தித்து, உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  தனக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் போண்டாமணி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “எனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன் நடிகர் விஜய் சேதுபதி 1 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். வடிவேலு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு சார்பில் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். நான் சம்பாதித்தது இது தான். அனைவருக்கும் நன்றி” என்று அந்த  வீடியோ உருக்கமாக பேசியுள்ளார்.