நடிகரும், கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்..

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் மற்றும் கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹூசைனி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சையின் பலன் இன்றி அவர் சற்றுமுன் உயிரிழந்தார். அவருக்கு வயது 60.கராத்தே மற்றும் வில் வித்தையில் பயிற்சி பெற்றவரான ஹூசைனி மதுரை சேர்ந்தவர். கே. பாலச்சந்தர் இயக்கிய ’புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பத்ரி படத்தில் விஜய்க்கு பாக்ஸிங் பயிற்சி கொடுக்கும் ஆசானாக அவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில், ஹூசைனிக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும், அவை பலனளிக்கவில்லை. மருத்துவர்கள் தன்னை கைவிட்டுவிட்டதாகவும், தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும், உயிரிழப்பதற்கு முன் அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையின் பெசன்ட் நகரில் இன்று மாலை வரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.