'தேரே இஷ்க் மெய்ன்' படக்குழு உடன் ஹோலி கொண்டாடிய நடிகர் தனுஷ்...!

டெல்லியில் 'தேரே இஷ்க் மெய்ன்' படக்குழு உடன் நடிகர் தனுஷ் ஹோலி கொண்டாடி உள்ளார்
தமிழ் சினிமாவில் தனுஷ் ஒரு நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டுள்ளார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் இவர், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஆனந்த் எல் ராய், தனுஷ் கூட்டணியில் அத்ரங்கி ரே எனும் திரைப்படமும் வெளியாகி வெற்றி படமாக அமைந்தது.
தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றுள்ள தனுஷ், மூன்றாவது முறையாக ஆனந்த் எல் ராய் உடன் இணைந்துள்ளார். தேரே இஷ்க் மெய்ன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு, படத்தின் நாயகி க்ரித்தி சனோன் மற்றும் இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் தனுஷ் ஹோலி கொண்டாடினார். அந்த புகைப்படத்தை நடிகை க்ரித்தி சனோன் வெளியிட்டுள்ளார்.