நடிகர் ரஜினிகாந்த் - சீமான் திடீர் சந்திப்பு..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், பல அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக, திமுக, மற்றும் பாஜக கூட்டணி உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்துள்ளார். இதன் மூலம், அவரது தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரை அனைத்து தேர்தலிலும் எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, இந்த முறை விஜய்யுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பலர் கணித்திருந்தனர். ஆனால் தவெக மாநாட்டிற்கு பிறகு இரு தரப்புகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் தவெக, நாதக கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
விஜய்க்கு எதிராக காய் நகர்த்த ரஜினியை சீமான் சந்தித்தாரா? ரஜினியின் ஆதரவை அவர் கேட்டாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையிலும் பாஜகக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காமல் இருந்த ரஜினி, நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் ஆதரவு தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.