×

பேச்சுவார்த்தையில் ‘கஜினி 2’: நடிகர் சூர்யா பகிர்வு

 

‘கஜினி 2’ படம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்காக தற்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா. மும்பையில் அளித்த பேட்டியொன்றில் ‘கஜினி 2’ நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் சூர்யா. அதில், “நீண்ட நாட்கள் கழித்து தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ‘கஜினி 2’ ஐடியா உடன் வந்து பண்ணலாமா என்று கேட்டார்.

கண்டிப்பாக சார் பண்ணலாம் என கூறியிருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. அது நடக்கலாம்” என தெரிவித்துள்ளார் சூர்யா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கஜினி’. 2005-ம் ஆண்டு வெளியான இப்படம் அமீர்கான் நடிக்க 2008-ம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதையும் ஏ.ஆர்.முருகதாஸே இயக்கி இருந்தார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.


தற்போது ‘கஜினி 2’ படத்தை தமிழில் சூர்யாவும், இந்தியில் அமீர்கானும் நடிக்க ஒரே சமயத்தில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் இப்படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருமா என்பது விரைவில் தெரியவரும்.