×

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற வடிவேலு... குவியும் வாழ்த்துக்கள் !

 

நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை அரசனாக இருப்பவர் வடிவேலு. 80-களில் சினிமாவில் அறிமுகமான அவர் படிப்படியாக வளர்ந்து மக்களை சிரிக்க வைத்து வருகிறார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றுள்ளார். 

கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது மீண்டும் புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பொழுதுப்போக்கு கலைஞருக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.