×

ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு

 

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தளத்தில் வெளியாகி இன்றளவும் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. இப்போது ஆறுமுகக்குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார். 

அதைத்தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்ற தலைப்பில் ஒரு படத்திலும் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது சமீபத்தில் துணைநிலை ஆளுநராக பதவியேற்ற கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.  

இதற்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளநர் பதவி வழங்கப்பட்டது. பின்பு அவர் மகாராஷ்டிராவிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி புதுச்சேரிக்கு கைலாஷ்நாதன் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.