×

மதுரை சிறைக்கு 1000 புத்தகங்கள்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நடிகர் விஜய் சேதுபதியின் செயல் !

 

மதுரை சிறைச்சாலைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை வழங்கியுள்ளார். 

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிறையிலும் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டு புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைசாலைகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நூலகம் செயல்பட்டு வருகிறது. 

இந்த நூலகத்தில் 15 புத்தகங்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த சிறைச்சாலை 1 லட்சம் புத்தகங்கள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறைக் கைதிகள் பயன்பெறும் வகையில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, சுமார் 1000 புத்தகங்களை மதுரை சிறைத்துறைக்கு வழங்கியுள்ளார். சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் ஆகியோரை சந்தித்து இந்த புத்தகங்களை அவர் வழங்கினார். 

இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, புத்தகங்கள் மூலம் சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியை நான் பாராட்டுகிறேன். இது குறித்து கேள்விப்பட்டதும் நிறைய புத்தகங்களை வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அதனால் முதற்கட்ட 1000 புத்தகங்களை வழங்கியுள்ளேன் என்று கூறினார்.