தனுஷுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகர் சங்கம்! ஸ்டிரைக் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு..!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த சில வாரங்களாக பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகின்றனர். நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசித்துவிட்டு படம் தொடங்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
அதே போல நடிகர் தனுஷுக்கு எதிராக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு நடித்து கொடுக்காததால் இனி தனுஷை வைத்து படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசித்துவிட்டு தொடங்கவும் என தெரிவித்து இருக்கின்றனர். மேலும், தமிழ் சினிமா துறையை மறுசீரமைக்கும் நோக்கில் அனைத்து சினிமா பணிகளும் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, "இது தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், வழக்கமாக அனைத்து சங்கங்களையும் கலந்தாலோசித்து தான் இந்த மாதிரி முடிவு எடுப்பார்கள். பல ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்க்கை இதில் இருக்கிறது" என கூறி இருக்கிறார்.
மேலும் தனுஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக தயாரிப்பாளர் சங்கம் கூறுகிறது, இதுவரை அவர் மீது ஒரு புகார் கூட நடிகராக சங்கத்திற்கு வந்ததில்லை எனவும் அவர் கூறினார். நடிகர்களின் தொழிலை முற்றிலும் தடை செய்வதாக அறிவிப்பதை ஏற்க முடியாது. இது பற்றிய விளக்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் என்ன செய்வது என்பது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கார்த்தி கூறி இருக்கிறார்.