ரஜினி பெயரில் பல கோடி ரூபாய் மோசடி... காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் !
நடிகர் ரஜினிகாந்த் பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமூக நலனில் மிகவும் அக்கறை கொண்ட அவர், தனது ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். அவரது பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி ரஜினி பவுண்டேஷன் அறங்காவலர் சிவராம கிருஷ்ணன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற போலி முகநூல் பக்கத்தை தொடங்கிய சில மர்ம நபர்கள், அதன்மூலம் பணமோசடி செய்துள்ளனர். இதுவரை குலுக்கள் முறையில் பரிசு வழங்குவதாக கூறி 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளனர்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சைபர் க்ரைம் மூலம் முகநூல் பக்கத்தை தொடங்கியது யார் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை தரப்பில் கூறியுள்ளனர்.