நான் இறந்துவிட்டேனா ?.. செய்தி பரப்பிய நபருக்கு நன்றி தெரிவித்த ஷகிலா !
நடிகை ஷகிலா இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ஷகிலா. மலையாளத்தில் கொடிக்கட்டி பறந்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். மலையாளத்தில் உள்ள முன்னணி கதாநாயகர்களை ஓரங்கட்டி வசூல் சாதனை செய்தது ஷகிலாவின் திரைப்படங்கள். ஷகிலாவின் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பிசியாக நடித்து வந்த ஷகிலாவுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகு சினிமா வாய்ப்பு பறிபோனது.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். லட்சங்களில் சம்பாரித்த வந்த ஷகிலா, உறவினர் மற்றும் நண்பர்கள் ஏமாற்றியதால் மிகவும் ஏழ்மையான நிலைக்கு மாறினார். சமீபகாலங்களில் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஷகிலாவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. கடைசியாக அவர் பங்கேற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி, ஷகிலாவுக்கு மறுவுருவம் கொடுத்தது. தற்போது திருநங்கை ஒருவரை வளர்ப்பு மகளாக ஷகிலா வளர்த்து வருகிறார். அதேநேரம் ஷகிலாவின் மறைந்த பக்கங்களை திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியானது. அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை ஷகிலா இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று தீயாய் பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷகிலா, வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அனைவருக்கும் வணக்கம், நான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தியை பார்த்தேன். நான் தற்போது மகிழ்ச்சியாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் உள்ளேன். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டும். இந்த செய்தியை கேள்விப்பட்டு எனக்கு தொலைப்பேசி மூலமாக அழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி, இந்த செய்தியை பரப்பிய அந்த நபருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.