ரொம்ப நாள் கழித்து நான் பார்த்த Engaging திரைப்படம் `லப்பர் பந்து' - வெற்றிமாறன் பாராட்டு
அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லப்பர் பந்து’. தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தை வெங்கடேஷ் இணைத்து தயாரித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் நேற்று (20.09.2024) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படக்குழுவை பாராட்டியிருந்தார். பின்பு சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் ஆகியோர் பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில் இப்படத்திற்கு வெற்றிமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “ரொம்ப நாள் கழிச்சு நான் பார்த்த நல்ல பொழுதுபோக்கு படம். ரைட்டர், டைரக்டர், கேமராமேன், நடிகர்கள் என எல்லாருமே அவுங்கவுங்க வேலையை அவ்ளோ அழகா பண்ணியிருக்காங்க. படத்தை பார்க்கும் போது, நான் எங்க ஊர்ல கிரிக்கெட் டீம் நடத்துன விஷயங்கள், அதில் சந்தித்த மனிதர்கள் எல்லாம் நியாபகத்துக்கு வந்தாங்க. நானுமே படத்தில் வரும் ஒரு கேரக்டர் போலத்தான். ஒரு கிராமத்தில் வளர்ந்தவர்களையும் கிரிக்கெட்டை விரும்பி பார்க்குறவங்களையும் என எல்லாருக்குமே இந்த படம் புடிக்கும். அதையும் தாண்டி ஒரு குடும்பத்தில் இருக்கும் முக்கியமான விஷயங்களையும் இந்தப் படம் பேசுகிறது. உண்மையிலே நான் ரொம்ப என்ஜாய் பன்னி பார்த்தேன்” என்றார்.
இதனிடையே பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக இப்படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எளிய கதாபாத்திரங்கள், அசலான வசனங்கள் கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் வழியே நிகழ்த்தி இருக்கும் கொண்டாட்டம் லப்பர் பந்து. தினேஷ், ஹாரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சய், பாலா, காளி வெங்கட், மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயல்பான திரைமொழியில், சமூக நோக்கோடு அசலான மனிதர்களின் உணர்வுகளை கொண்டாட்ட சினிமாவாக படைத்திருக்கும் இயக்குனர் தமிழரசனுக்கு க்கு என் அன்பும் வாழ்த்துகளும்! தொடரட்டும் உம் கலைப்பணி” எனக் குறிப்பிட்டுள்ளார்.