×

 'அமரன்' பட வெற்றி.. ஜிவி பிரகாஷ்க்கு பரிசளித்த சிவகார்த்திகேயன் 

 

அமரன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் பாராட்டை பெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு வாட்ச் ஒன்று பரிசு வழங்கியுள்ளார்.
 ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் 'அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அமரன் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 200 கோடியைக் கடந்து வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அமரன் அதிகபட்ச வசூல் என்றும் கூறப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான அமரன் மற்றும் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் ஜிவி பிரகாஷ் குமார் இரட்டை சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் அமரன் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள சிவகார்த்திகேயன் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதனை ஜிவி பிரகாஷ் குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.