×

விஜய், சீமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயார் - இயக்குனர் அமீர் 

 

தமிழ் சினிமா கலைஞர்களில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே அரசியல் குறித்தும் சமூகம் குறித்தும் மிக தைரியமாக எல்லா காலகட்டத்திலும் பேசக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் அமீர். இவர் தற்போது நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் பணியாற்ற, விஜய் என்னை அழைத்தால் கட்டாயம் செல்வேன் எனவும் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாதக ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து பயணித்தால், இருவருடன் இணைந்து பயணிக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சுப்பிரமணிபுரம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் பிரியாணி கடை திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் அமீர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் சூழல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா எனவும் அப்படி அரசியலுக்கு வந்தால் திராவிட கட்சியில் சேரூவீர்களா எனவும் அமீரிடம் நிரூபர்கள் கேட்டதற்கு, 'அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள் உணர்வு சொல்கிறது. திராவிடம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்தால் மட்டுமே திராவிடம் வேண்டும், வேண்டாம் என்று தெரியவரும். ஆரியத்திற்கு எதிரான சொல் தான் திராவிடம் ஆகும். திராவிடம் என்பது நம்முடைய மண் ,ரத்தம் உணர்வுகளில் கலந்து இருப்பது. ஆகையால் அனைவரும் திராவிடர்கள் தான், திராவிட சிந்தனைகள் உள்ளவர்கள் தான். பாசிச அரசியலுக்கு எதிராக யாரெல்லாம் அரசியல் செய்கிறார்களோ அது திராவிட அரசியலாகும். பாசிசதிற்கும், ஆரியத்திற்கும் எதிராக செய்யக்கூடிய அரசியல் திராவிட அரசியல் எனப்படும்' எனக் கூறினார்.

 மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு, 'மத்திய அரசின் நிலைப்பாடு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இருந்து தெளிவாக தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தது தான் மேலும் வேதனை அளிக்கிறது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்க வேண்டும்' என்றார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, 'அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி' என பதில் அளித்தார்.நடிகர் விஜயின் அரசியல் குறித்தும், விஜய் அல்லது சீமான் இவர்களில் யாருடன் அரசியலில் பயணம் செய்ய உள்ளீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு, 'விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் செல்வேன். விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்' என பதில் அளித்தார். இயக்குநர் அமீர் விஜய் மற்றும் சீமானுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளது அரசியல் தளத்திலும் சினிமா தளத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.