×

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் எதிர்பாராத திருப்பம் - விசாரணை வளையத்திற்குள் நெல்சன் 
 

 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை உட்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர், கொலைக்கான காரணம் என்ன என்பது மட்டும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் தாய்லாந்துக்குச் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து இந்த கொலை தொடர்பாக தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்திய அடிப்படையில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை ஆந்திராவில் கைது செய்தனர் தனிப்படை போலீசார். அவரை செப். 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்தக்கட்டமாக நெல்சனிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.