“80 நிமிட உரையாடல்.. காதலியைப் பிரிவதுபோல் விடைகொண்டு வந்தேன்...” - வைரமுத்து நெகிழ்ச்சி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனிடையே கூலி படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, சைமன் என்ற கதாபாத்திரத்திலும் கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும் ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். நடிகர் ரஜினி காந்தும் கூட மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு கூலி படத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினி - கவிஞர் வைரமுத்து சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து, “
கடிகாரம் பாராத
உரையாடல்
சிலபேரோடுதான் வாய்க்கும்
அவருள் ஒருவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
80நிமிடங்கள்
உரையாடியிருக்கிறோம்
ஒரே ஒரு
‘கிரீன் டீ’யைத் தவிர
எந்த இடைஞ்சலும் இல்லை;
இடைவெளியும் இல்லை
சினிமாவின் அரசியல்
அரசியலின் சினிமா
வாழ்வியல் - சமூகவியல்
கூட்டணிக் கணக்குகள்
தலைவர்கள்
தனிநபர்கள் என்று
எல்லாத் தலைப்புகளும்
எங்கள் உரையாடலில்
ஊடாடி ஓய்ந்தன
எதுகுறித்தும்
அவருக்கொரு தெளிவிருக்கிறது
தன்முடிவின் மீது
உரசிப் பார்த்து
உண்மை காணும்
குணம் இருக்கிறது
நான்
அவருக்குச் சொன்ன
பதில்களைவிட
அவர் கேட்ட கேள்விகள்
மதிப்புமிக்கவை
தவத்திற்கு ஒருவர்;
தர்க்கத்திற்கு இருவர்
நாங்கள்
தர்க்கத்தையே
தவமாக்கிக் கொண்டோம்
ஒரு காதலியைப்
பிரிவதுபோல்
விடைகொண்டு வந்தேன்
இரு தரப்புக்கும்
அறிவும் சுவையும் தருவதே
ஆரோக்கியமான சந்திப்பு
அது இது” என தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.