×

இந்த தசாப்தத்தில் ஒரு நேர்மையான படம்; விநியோகஸ்தர் பாராட்டிய 'திரு.மாணிக்கம்'!

 

கடந்த 2005ஆம் ஆண்டில், நடிகர் ஆர்யா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான ‘ஒரு கல்லூரியின் கதை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நந்தா பெரியசாமி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மாத்தி யோசி, வண்ண ஜிகினா, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களை இயக்கியிருந்தார். படங்களை இயக்குவதைத் தாண்டி, மாயாண்டி குடும்பத்தார், யோகி, கோரிப்பாளையம், சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பாலிவுட் இயக்குநரான ஆகர்ஷ் குரானா இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளியான ராஷ்மி ராக்கெட் படத்தின் கதையை நந்தா பெரியசாமி எழுதியிருக்கிறார். 


இந்த நிலையில் அவர், சமுத்திரக்கனியை வைத்து ‘திரு.மாணிக்கம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், சாம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை ஜீ தமிழ் நிறுவனம், ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கிறது. இப்படம் விரைவில், திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  

ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இப்படத்தை பற்றி நல்ல கருத்துகள் உலாவி வருகிறது. அந்த வகையில், பிரபல விநியோகஸ்தர் ஒருவர், இப்படத்தை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். மாநாடு, வலிமை, மார்க் ஆண்டனி போன்ற படங்களை விநியோகம் செய்த சுப்பையா பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்த தசாப்தத்தில் நான் பார்த்த நேர்மையான மற்றும் சிறந்த திரைப்படங்களில் ஒன்று.  ஒவ்வொரு மனிதனும் இந்த அற்புதமாக படத்தை பார்க்க வேண்டும். இந்தப் படத்தை விநியோகிப்பதில் முழு மனதுடன் மகிழ்ச்சி அடைகிறேன். சமுத்திரக்கனியின் பிரமாதமான நடிப்புக்கு என்னுடைய வாழ்த்துகள். நந்தா பெரியசாமி இப்படத்தை சிறப்பாக இயக்கிவுள்ளார். ஜிபிஆர்கே சினிமாஸ், நல்ல படத்தை தயாரித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.