×

வேட்டையன் படத்தின் "ஹண்டர் வண்டார்" பாடல் - சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த அனிருத்

 

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் வெளியாகி கவனம் பெற்றதையடுத்து படத்திலிருந்து ‘மனசிலாயோ...’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இதனிடையே படத்தின் டப்பிங் பணிகளை மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரஜினிகாந்த் ஆகியோர் தொடங்கியிருந்தனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20ஆம் தேதி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

null


இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை தொடர்ந்து வெளியிட்டு வரும் படக்குழு, இதுவரை ரூபா என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் ரித்திகா சிங்கும் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயனும் தாரா என்ற கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியரும் நடித்துள்ளதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படத்திற்கான ராணா டகுபதியின் கதாபாத்திர அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக தெரிவித்து, படப்பிடிப்பில் அவர் நடித்த காட்சிகளை எடிட் செய்து சிறிய வீடியோவாகவும் படக்குழு பகிர்ந்துள்ளது. 

மேலும் இப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பை வீடியோவாக அனிருத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ‘ஹே சூப்பர் ஸ்டாருடா ஹண்டர் வண்டாற் சூடுடா...’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சித்தார்த் பஸ்ரூர் பாடியிருக்க தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். இப்பாடல் வருகிற 20ஆம் தேதி வெளியாகும் என அனிருத் தெரிவித்துள்ளார்.