சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் ’தேவரா’ படம் பார்த்த அனிருத்...!
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சயிஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று (செப்.27) வெளியாகியுள்ள திரைப்படம் 'தேவரா'. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பு வெளியான தேவரா தீம் பாடல், சுட்டமல்லி ஆகிய பாடல்கள் வரவேற்பை பெற்றன. மேலும் தேவரா டிரெய்லர் வெளியாகி படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஜுனியர் என்டிஆர், சோலோ ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் ‘அரவிந்த சமேதா’ கடந்த 2018இல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு பிறகு தற்போது தேவரா திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் தேவரா படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. இதனால் தேவரா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்தில் ஜுனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தேவரா முதல் காட்சி ஹைதராபாத்தில் அதிகாலை திரையிடப்பட்டது. தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்கள் ராம் சரண் உள்ளிட்ட பலர் தேவரா ரிலீசாவதை முன்னிட்டு ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களிலும் ’தேவரா’ திரைப்படம் வெளியாகியுள்ளது. சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் தேவரா இசையமைப்பாளர் படம் பார்த்து, தேவரா தீம் பாடலை பாடினார். மேலும் சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் தேவரா திரைப்பட வெளியீட்டை ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் கொண்டாடினர். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.