×

கொட்டுக்காளி திரைப்படம் குறித்து கதாநாயகி அன்னா பென் நெகிழ்ச்சி பதிவு...!

 

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியானது. திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதுகுறித்து சூரி அவரது எக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் இப்படம் உண்மைக்கு மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட படம், இப்படத்தில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் கொட்டுக்காளி." என்று பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான அன்னா பென் அவரது கதாப்பாத்திரத்தை குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மீனா என்ற கதாப்பாத்திரத்தில் அன்னா  பென் நடித்துள்ளார். "மீனா என்னுள் ஒரு அங்கம் என்பது நான் அறிந்ததே இல்லை, பல அற்புதமான விஷயங்களில் கொட்டுக்காளி ஒரு வெளிப்பாடு. இந்த கொட்டுக்காளி அவள் எவ்வளவு அன்பானவளாக இருக்கிறாளோ, அதே போல் வலிமையும், நெகிழ்ச்சியும் உடையவள். மதுரை வழியாக இந்த பயணத்தில் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்"  என பதிவிட்டுள்ளார். இந்த திரைப்படம் மற்றொரு வெற்றிப்படமாக சூரி மற்றும் வினோத் ராஜ்-க்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.