‘மகாராஜா’ வன்முறை காட்சிகள் மீதான விமர்சனத்துக்கு அனுராக் காஷ்யப் விளக்கம்
வன்முறைக் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாகவும், தீவிரத் தன்மையுடனும் இருந்தால், அதைப் பார்க்கும்போது அது உங்களை அப்படிப்பட்ட செயல்களிலிருந்து தடுத்துவிடும் என்று நான் நம்புகிறேன்” என இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “சமீப காலமாக நான் இந்திப் படங்களை விட மலையாளப் படங்களையே அதிகம் பார்க்கிறேன். காரணம், அந்தப் படங்கள்தான் எனக்கு ஆர்வத்தை தூண்டுகின்றன. மலையாள சினிமாவில் ஒவ்வொருவரும் தனித்துவமான முறையில் அசல் கதைகளைச் சொல்கின்றனர். ‘பிரமயுகம்’ போல ஒரு கருப்பு - வெள்ளை படத்தை யாராலும் உருவாக்க முடியாது. ‘ஆவேஷம்’ போன்ற கமர்ஷியல் படங்கள் கூட நேர்த்தியான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.
பாலிவுட்டைப் பொறுத்தவரை அவர்கள் உச்சநட்சத்திரங்களை கதாபாத்திரங்களுக்குள் கொண்டுவர மெனக்கெடுவார்களே தவிர, கதையில் கவனம் செலுத்தமாட்டார்கள்” என விமர்சித்தார். மேலும் ‘மகாராஜா’ படத்தின் வன்முறை குறித்து அவர் பேசுகையில், “நான் அண்மையில் ‘கில்’ படம் போல ஒரு தமிழ்ப் படத்தில் நடித்தேன். படத்தில் அதீதமான வன்முறைக் காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. வன்முறைக் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாகவும், தீவிரத்தன்மையுடனும் இருக்கும்பட்சத்தில் அதைப்பார்க்கும்போது அது உங்களை அப்படிப்பட்ட செயல்களிலிருந்து தடுத்துவிடும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.