‘ராமாயணா’ படத்தில் பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறேன்-.ஏ.ஆர்.ரஹ்மான்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ என்ற படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5ம் தேதி பல்வேறு மொழிகளில் திரைக்கு வருகிறது. ஐமேக்ஸ் திரைகளிலும் இப்படம் வெளியாகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, லட்சுமணனாக ரவி துபே, ராவணனாக யஷ் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசை அமைத்துள்ளனர். சமீபத்தில் இணையதளங்களில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், ‘ஒரே இடத்தில் நாம் தேங்கி நிற்க முடியாது. ஓடுகின்ற நதியை போல் தொடர்ந்து நகர வேண்டும். பல தலைமுறைகள் அறிந்த இந்தியாவின் கலாச்சார காவியமான ‘ராமாயணா’ என்ற படத்தில் பணியாற்றுவதை மிகப்பெரிய பெருமையாகவும், பொறுப்பாகவும் நினைக்கிறேன். ஆஸ்கர் விருது வென்ற 14 ஆண்டுகளுக்கு முன்பே ஹான்ஸ் ஜிம்மர், தன்னுடன் இணைந்து பணியாற்ற என்னை அழைத்தார்.
எப்போதுமே இணையதள கருத்துகளை நான் பின்தொடர்வது கிடையாது. எனது மகன் ஆமின், அந்த விமர்சனங்களை பற்றி என்னிடம் சொல்வான். ஆனால், நான் எனது வேலையை அதிக நேர்மையுடன் செய்துள்ளேன். மக்கள் இதை நிச்சயம் கொண்டாடுவார்கள்’ என்றார்.