×

அவர் இல்லாதது பெரும் இழப்பு.. திடீரென விவேக் நினைவுக்கூர்ந்த ஏ.ஆர்.ரகுமான் !

 

மறைந்த காமெடி நடிகர் விவேக் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் போட்ட பதிவு வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். நகைச்சுவையுடன் சேர்த்து முற்போக்கான கருத்துக்களை மக்களிடையே எளிமையாக எடுத்துச் சென்றவர் விவேக். மேலும் விவேக் இயற்கை மீது பேரன்பு கொண்டவர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.  எனவே அவர் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு, இளைஞர்கள் அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தி வந்தார்.  

கடந்த ஆண்டு 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விவேக் திடீரென மாரடைப்பால் காலமானார். விவேக்கின் மறைவு தமிழக மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் ‘தல தீபன்’ என்பவர் விவேக்கின் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், ரீட்வீட் செய்துள்ளார். அதில் காமெடி லெஜண்ட் விவேக்கை மிஸ் செய்வதாகவும், அவர் இல்லாதது பெரும் இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.  திடீரென விவேக் குறித்து ஏ.ஆர்.ரகுமான் நினைவு கூர்ந்துள்ளது எதற்கான தெரியவில்லை. 

கடந்த 2001-ஆம் ஆண்டு ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ படத்தில் விவேக்கின் அந்த காமெடி இடம்பெற்றுள்ளது. திரைப்பட இயக்குனராக முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் விஜயகாந்தை சந்தித்து கதை சொல்லுவார். அப்போது ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் விஜயகாந்திடம் பயன்படுத்துவார். அதற்கு விஜயகாந்த், தமிழ் மொழி பற்றியும், தமிழர்கள் பற்றியும் பெருமை பொங்கும் வகையில் பேசுவார். அதோடு இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழி அவசியம் குறித்து விவேக்கிடம் கூறியிருப்பார். இந்த காட்சியை ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.