ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - இயக்குனர் நெல்சனிடம் தனிப்படை விசாரணை
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உட்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
பின்பு இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் தனிப்பை காவல்துறையினர் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் மோனிஷாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணனுக்கு சென்றிருப்பதாக கூறப்பட்டது. மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அத்தகவலை மறுத்து மோனிஷா சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக காவல் துறையினர் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியதாகவும் அதனடிப்படையில் விசாரணைக்கு ஒத்துழைத்துத் தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மொட்டை கிருஷ்ணனுக்குப் பணப் பரிவர்த்தனைகள் செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தியில் உண்மையில்லை என்றும் அது பொய்யானது மற்றும் ஆதாரமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அடையாரில் உள்ள வீட்டில் தனிப்படை காவல்துறையினர் சென்று சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மொட்டை கிருஷ்ணன் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.