×

 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 7வது தேசிய விருது : முழு விவரம் இதோ...

 

70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்கள், நடிகைகள், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த ,பின்னணி இசைக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானுக்கு இது 7வது தேசிய விருது ஆகும். முன்னதாக, 1990ம் ஆண்டு தனது முதல் படமான ரோஜா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.

இதைதொடர்ந்து, 1996ம் ஆண்டு மின்சார கனவு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.2001ம் ஆண்டு கண்ணத்தில் முத்தமிட்டால் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.2017ம் ஆண்டில், ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அதில், காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், இந்தியில் மாம் என்கிற படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதும் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் பொன்னியின் செல்வன்-1ம் படத்திற்காக 7வது தேசிய விருது பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.