10 ஆண்டுகளை நிறைவு செய்த 'என்னை அறிந்தால்..' மீண்டும் அஜித்துடன் இணைய காத்திருக்கும் அருண் விஜய்...

நடிகர் அருண் விஜய் மீண்டும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் விவேக், பார்வதி நாயர், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் மேனன் கூட்டணி, முதல் முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், டீசர் மற்றும் ட்ரைலரில் இடம்பெற்ற அஜித்தின் லுக்குகள் எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன்இப்படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் அருண் விஜய்க்கு ஒரு முக்கியமான படமாக அமைந்தது. அவரது திரை வாழ்க்கையில் இதற்கு முன்னாடி ஹீரோவாக பல படங்கள் பண்ணியிருந்தாலும் அந்த படங்கள் கொடுக்காத வெற்றி இந்தப் படத்தில் அவர் முதல் முறையாக வில்லனாக நடித்திருந்தது பெற்றுத் தந்தது. முதல் நாள் முதல் காட்சியில் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்த அருண் விஜய், அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் கண்கலங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 10ஆண்டுகள் கடக்கிறது. இதையொட்டி அஜித் ரசிகர்கள் இப்படம் குறித்து சமூக வலைதளங்களில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் படம் பார்த்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே அருண் விஜய், இப்படம் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், பத்து ஆண்டுகள் இப்படம் கடந்துள்ளதை நினைவுகூர்ந்த அருண் விஜய், “மீண்டும் அந்த மேஜிக் நிகழ நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.