"ரஜினி செயலால் பிரமிப்பில் சிலை போல் நின்றுவிட்டேன்’-அஸ்வத் மாரிமுத்து
ரஜினிகாந்த், சிம்ரன், ராசி கன்னா நடிக்கும் ‘தர்மன்’ என்ற படத்தை அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க, அனிருத் இசை அமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் அஷ்வத் மாரிமுத்து அளித்த பேட்டியில், ‘ரஜினிகாந்த் சாருடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்பு ‘ஓ மை கடவுளே’ படத்தில் அசோக் செல்வன், ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஆகியோருடன் பணியாற்றினேன். அவர்கள் இருவரும் இளம் கதாநாயகர்கள். கடந்த இரண்டு மாதங்களாக ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றி வருகிறேன்.
அவரை போல் ஒரு இனிமையான நபரை பார்த்தது இல்லை. படப்பிடிப்பில் என்னை பார்க்கும்போது எல்லாம் அவர் எழுந்து நிற்பார். இதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது, ‘இது நான் கலைக்கும், இயக்குனருக்கும் கொடுக்கும் மரியாதை’ என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பிரமிப்பில் சிலை போல் நின்றுவிட்டேன்’ என்றார். கடந்த ஆண்டு நவம்பரில் இப்படத்தின் இயக்குனராக சுந்தர்.சி அறிவிக்கப்பட்டார். பிறகு அவர் விலகினார். இதையடுத்து, ‘டான்’ என்ற படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு அவரும் மாற்றப்பட்டு, தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.