×

பிக்பாஸ் சீசன் 8 செட் அமைக்கும் பணி: 20 அடி உயரத்திலிருந்து விழுந்த வடமாநிலத் தொழிலாளர் காயம்! 

 

ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிக்பாஸ் சீசன் 8 செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, வடமாநிலத் தொழிலாளர் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஈவிபி ஃபிலிம் சிட்டி (EVP Film city) அமைந்துள்ளது. இங்கு பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செட் அமைத்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இங்கு பிரம்மாண்ட வீடு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 8வது சீசன் வரும் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்காக அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டின் உட்பகுதியில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாயின் கான்(47) என்பவர் பிக்பாஸ் செட் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தொழிலாளரை மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நசரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈவிபி பிலிம் சிட்டியில் ஏராளமான படங்களுக்கு செட் அமைக்கபட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியன் 2, காலா, பிகில் உள்ளிட்ட படங்களுக்கு செட் அமைக்கும் போது கிரேன் விழுந்து சிலர் இறந்து போன சம்பவமும் அரங்கேறியுள்ளது.
தற்போது இந்த பகுதியில் புதிய செட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்த செட்கள் உரிய அனுமதி பெற்று அமைக்கப்பட்டு வருகிறதா என்பதை வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி வடமாநில தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது