×

சென்சார் போர்டு விதித்த கெடு; தீவிர ஆலோசனையில் கங்கனா

 

பா.ஜ.க. எம்.பி. மற்றும் நடிகையுமான கங்கனா ரனாவத், இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’. இப்படம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவருடன் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. இன்னும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறவில்லை என்பதால் புதிய ரிலீஸ் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. 


முன்னதாக படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, ஒவ்வொரு சமூகத்தினரின் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதாகக்கூறி பல காட்சிகளை நீக்க உத்தரவிட்டது. இதையடுத்து சென்சார் சான்றிதழ் தரக்கோரி படக்குழு சார்பில் இணைத் தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மும்பை நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு பல கட்டங்களாக விசாரணைக்கு வந்துள்ளது. கடைசியாக வந்த விசாரணையில், ஜி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அக்டோபரில் நடைபெறவுள்ள ஹரியானா மாநிலத் தேர்தல் முடியும் வரை சென்சார் போர்டு படத்தின் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக வாதிட்டார். இதையடுத்து செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் படத்தின் சான்றிதழைப் பற்றி இறுதி முடிவு எடுக்குமாறு சென்சார் போர்டு குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சென்சார் போர்டு சார்ப்பில் ஆஜரன வழக்கறிஞர், சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டி சீக்கியர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தொடர்பாக 13 மாற்றங்கள் செய்தால் யு/ஏ சான்றிதழ் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். பின்பு ஜீ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டி கூறிய திருத்தங்களை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவைப்படுவதால் வழக்கின் விசாரணையை தள்ளிவைக்குமாறு நீதிபதியிடம் கேட்டார். இதை ஏற்ற நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதையடுத்து தற்போது சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டி கூறியது குறித்து கங்கனா தனது டீமுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.