×

ஹீரோவாகும் ‘குக் வித் கோமாளி’ புகழ் ரக்ஷன்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு ! 

 

விஜே ரக்ஷன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.  

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் ரக்ஷன். குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மிகவு பிரபலமானார். அதில் காமெடியுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து துல்கர் சல்மானுடன் இணைந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். 

இதையடுத்து புதிய படம் மூலம் ஹீரோவாக ரக்ஷன் அறிமுகமாகவுள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை யோகேந்திரன் என்பவர் இயக்கவுள்ளார். பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர். 

இந்த படத்தில் கதாநாயகியாக விஷாகா திமான் நடிக்கிறார். இவர்களுடன் ‘கலக்கப்போவது யாரு’ தீனா, பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, மலையாள இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். 

உணர்வுப்பூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையடுத்து விரைவில் கன்னியாகுமரி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.