தொடர் கனமழை - ‘கூலி’ படப்பிடிப்பு பாதிப்பு
தொடர் மழையால் ‘கூலி’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழு சென்னை திரும்பியிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. பின்பு சென்னையில் சண்டைக்காட்சி ஒன்றிணை படமாக்கினார்கள்.
தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கி வந்தார்கள். இந்த படப்பிடிப்பு சுமார் 50 நாட்கள் வரை திட்டமிடப்பட்டது. ஆனால், தொடர் மழையால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே சென்னை திரும்பியிருக்கிறார்கள்.
விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலேயே தொடங்கவுள்ளது. மழை கொஞ்சம் குறைந்தவுடன், மீண்டும் நடிகர்களின் தேதிகள் பெறப்பட்டு படப்பிடிப்பினை தொடங்கவுள்ளார்கள்.