நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடிகர் முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் நேற்று முன்தினம் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர்.