“இருண்ட நாட்கள்... இது 4-வது அறுவை சிகிச்சை!” - டிடி திவ்யதர்ஷினி உருக்கம்
“கடந்த 10 ஆண்டுகளில் எனது வலது கால் மூட்டுக்காக செய்யப்பட்ட 4-வது அறுவை சிகிச்சை இது. மேலும், இது என்னுடைய கடைசி மூட்டு அறுவை சிகிச்சையாக இருக்கும் என நம்புகிறேன்” என்று நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான திவ்ய தர்ஷினி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு நான் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆம், முழுமையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் அது. கடந்த 10 ஆண்டுகளில் எனது வலது கால் மூட்டுக்காக செய்யப்பட்ட 4-வது அறுவை சிகிச்சை. மேலும், இது என்னுடைய கடைசி மூட்டு அறுவை சிகிச்சையாக இருக்கும் என நம்புகிறேன். இதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தபோதிலும், முன்னேற்றமும் கண்டுள்ளேன். 2 மாத அறுவை சிகிச்சைக்குப் பின், என்னை நேசிப்பவர்களுக்காகவும், ஆதரிப்பவர்களுக்காகவும், என் வலியை புரிந்துகொள்பவர்களுக்காகவும் இந்தப் பதிவை எழுதுகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் இந்த அளவில்லா அன்பை பெற நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என நினைத்து ஆச்சரியப்படுகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் அன்பும், ஆதரவும் தான் இருண்ட நாட்களை கடக்க எனக்கு உதவியது. மீண்டும் நலமாக திரும்பி வருவேன். உங்களை விரைவில் சந்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள டிடி, மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.