×

'டிமாண்டி காலனி 2' படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்...!

 

தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் படங்கள் சமீப காலமாக பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு உதாரணமாக, சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து கடந்த 2015ஆம்‌ ஆண்டு வெளியான திரைப்படம் 'டிமாண்டி காலனி'. ஹாரர் படங்களில் வித்தியாசமான உருவாக்கத்தில் கலக்கியது 'டிமாண்டி காலனி'. மேலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் 'டிமாண்டி காலனி இரண்டாம் பாகம்' படமாக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ளது. டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை விட பிரமாண்டமாகவும், பல சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் இப்படத்தை அஜய் ஞானமுத்து உருவாக்கியுள்ளார். இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேபோல், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

'டிமாண்டி காலனி 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதைக் கொண்டாடும் வகையில், அருள்நிதி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவகத்தில் கேக் வெட்டியுள்ளனர். பிரபல சினிமா வர்த்தக இணையதளத்தின் தகவலின்படி, டிமாண்டி காலனி இதுவரை இந்திய அளவில் 7.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.