×

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு; 3வது முறையாக ஒத்திவைப்பு..!

 

திருமணமாகி பதினெட்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.  கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ மனமில்லாமல் பிரிய முடிவெடுத்து தங்களது சமூக வலைதளங்கள் மூலமாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து இருவரும் தங்களின் பணிகளில் கவனம் செலுத்தி வந்ததோடு மகன்களோடும் நேரத்தை செலவிட்டு வந்தனர். 

அதைத் தொடர்ந்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, 2004ஆம் ஆண்டு நடந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோரை கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வருகையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகாமலிருந்த நிலையில், விசாரணை அக்டோபர் 19ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் ஆஜராகாமலிருந்ததால் விசாரணை இன்று(02.11.2024)  ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றோடு மூன்றாவது முறையாக தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வருகிற நவம்பர் 21ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.