×

ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

 

அமரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்து இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பேசுபொருளாகியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ், காஃபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இயக்குநராக பணியாற்றி தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ராஜ்குமார் பெரியசாமி. இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸிடம் துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜ்குமார் பெரியசாமி, ’ரங்கூன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த ரங்கூன் திரைப்படம், நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அமரன் திரைப்படம் மூலம் படமாக்கினார். கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி இந்து ரெபேகா கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றி பெற்ற ’அமரன்’ திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமரன் திரைப்படத்தை திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ள ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனிடையே சமீபத்திய நேர்காணலில், அடுத்ததாக தான் இயக்கும் படத்தில் ஒரு அசாத்திய திறமை கொண்ட நடிகர் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், தற்போது தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், மற்றும் ’இட்லி கடை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அது மட்டுமின்றி ’குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார்.