×

‘ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இனி சினிமா பார்க்காதீங்க’  - வெளுத்து வாங்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் !

 

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இனி எந்த சினிமாவை பார்க்காதீர்கள் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார். 

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருப்பவர் அல்போன்ஸ் புத்திரன். தமிழில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு மலையாளத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’  திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. வித்தியாசமான திரைக்கதையால் இந்தியா சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதையடுத்து பிரத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கோல்டு’ இயக்கினார். 

அழகான படங்களை கொடுத்து வரும் அல்போன்ஸ் புத்திரன், சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவர் வெளியிடும் பதிவுகளும் சில சமயங்களில் சர்ச்சையாவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித்தை, பல ஆண்டுகளாக சந்திக்க முயற்சித்தும் என்னால் முடியவில்லை என்று கூறியிருந்தார். இது சர்சசையானது. அதேபோன்று ரசிகர்களிடம் பேசும் சில சிக்கல்களை சந்தித்தார். 

இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி சினிமாவிற்கு வங்கி கடன் வழங்காததால் அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சினிமா பார்ப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவை எடுத்த நபருக்கோ அல்லது அமைச்சருக்கோ எந்த சினிமாவையும் பார்க்க உரிமையில்லை. 

பசுவின் வாயை மூடிக்கொண்டு பால் எதிர்பார்க்காதீர்கள் நமது அன்புக்குரிய பிரதமர் மோடி அவர்கள் சினிமாவைக் கொன்று குவிக்கும் இந்த தீவிரமான பிரச்சினையை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.