×

“கொட்டுக்காளியை திணித்தது வன்முறை” - அமீர் கருத்து

 

மாரி செல்வராஜின் வாழை படமும், சூரியின் கொட்டுக்காளி படமும் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வாழை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றும் கொட்டுக்காளி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றும் வருகிறது. இவ்விரு படங்களையும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பாராட்டி பேசியிருந்தனர்.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களைப் பற்றி அமீர் கருத்து தெரிவித்துள்ளார். ‘கெவி’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்த போது, “சமீபத்தில் வந்த வாழை, கொட்டுக்காளி படங்களை பெரிய அளவில் புரமோஷன் செய்தது இயக்குநர்கள்தான். அவர்களுடைய பார்வையில் அந்த படங்கள் சரியானதாக இருக்கலாம். ஆனால் பணம் கொடுத்து பார்ப்பவர்களின் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. 

பல வேலைகளுக்கு நடுவில் தன் குடும்பத்துடன் சினிமா பார்க்க வரும் போது திரையரங்கில் அவன் ரசிக்கக் கூடிய அளவிற்கு அந்த படங்கள் இல்லை என்பதை பற்றிதான் நான் சொல்ல வருகிறேன். படம் நன்றாக இல்லை என்று சொல்லவில்லை. கொட்டுக்காளி சர்வதேச விருதுகளை பெற தகுதியான படம்தான். ஆனால் வெகுஜன மக்களுக்காக மாற்றி அந்த காம்படீசனில் கொட்டுக்காளியை திணித்தது ஏன்? இப்படி திணித்தது வன்முறையாக எனக்கு தெரிகிறது. தேவையில்லாமல் ஒரு பெரிய படத்துடன் போட்டிப்போட்டால் என்னவாகும்? வாழையும், தி கோட் படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இது போன்ற வன்முறைகளைதான் செய்யக் கூடாது என்கிறேன்” என்றார்.