×

மாரி செல்வராஜின் வாழை - மனமுடைந்த பாலா

 

மாமன்னன் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தில் நான்கு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர்.

இப்படம் நாளை (22.08.2024) உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது, அதில் வெற்றி மாறன், ராம், மிஷ்கின், நெல்சன் உள்ளிட்ட பல இயக்குநர்களும் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், கவின் உள்ளிட்ட பல நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொண்டு இப்படத்தைப் பாராட்டி பேசினர். மேலும் அவ்விழாவில் பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களும் சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் காணொளி வாயிலாக இப்படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 



இதற்கிடையே இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த பல திரைப்பிரபலங்கள், அவர்களின் சமூக வலைதளபக்கத்தில் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குநர் பாலாவின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் படம் பார்த்து வெளியே வந்த பாலா, மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் மனமுடைந்து வார்த்தைகள் வெளிவராமல் இருக்கும் நிலையில் பாலா உட்கார்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் வாழை படத்தை தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்துத்தான் எடுத்ததாக மாரி செல்வராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.