×

லிங்குசாமிக்கு 6 மாத சிறைத்தண்டனை.. தப்பிக்க எடுத்த அதிரடி முடிவு  !

 

தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து சட்ட ரீதியாக போராட இருப்பதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். 

பிரபல இயக்குனராக இருக்கும் லிங்குசாமி, கடந்த 2014-ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சமந்தா இணைந்து நடித்த 'இன்னும் ஏழு நாள்' என்ற படத்தை தயாரித்தார்.  இந்த படத்தை தயாரிக்க பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 1 கோடியே 3 லட்சம் வாங்கியது. இந்த தொகையை லிங்குசாமி நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணத்தை திருப்பி கொடுக்க லிங்குசாமிக்கு உத்தரவிட்டது‌. இதைத்தொடர்ந்து பிவிபி நிறுவனத்திற்கு 3 கோடியே 3 லட்சம் ரூபாயை செக்காக லிங்குசாமி கொடுத்தார். இந்த செக் வங்கியில் பணம்‌ இல்லாமல் திரும்பியது. இதனால் லிங்குசாமி மீது மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இயக்குனர் லிங்குசாமி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்ததது. அதோடு கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் இயக்குனர் லிங்குசாமி சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை சட்டரீதியாக சந்திக்க உள்ளதாக இயக்குனர் லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று என்னைப் பற்றி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திக்கு தன்னிலை கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலானது. நேற்று இந்த மேல் முறையீட்டில் மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.