×

"நம்ம படம் ரிலீசாகும் அன்று தான் பண்டிகை" -  அஜித் கூறியதை பகிர்ந்த இயக்குனர் மகிழ் திருமேனி 

 

 'விடாமுயற்சி' வெளியாகும் நாள் பண்டிகையாக இருக்கும் என படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது.படப்பிடிப்பின் போது பல தடைகளை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து படக்குழு தற்போது தீவிர ப்ரமோஷனில் இறங்கியுள்ளது. விடாமுயற்சி இயக்குநர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்தும், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது குறித்தும் பேசியுள்ளார். 

விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப் போனது குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி, “நான் விடாமுயற்சி படம் வெளியீடு தள்ளிப்போனது குறித்து கவலைபட்ட போது, அஜித் சார் என்னிடம் வந்து, மகிழ் கவலைப்பட வேண்டாம். பண்டிகை நாளில் நமது படம் வெளியாகவில்லை என்றால் என்ன? நமது படம் வெளியாகும் நாள் பண்டிகையாக இருக்கும் என்றார். மேலும் அஜித் என்னிடம் விடாமுயற்சி என்ற தலைப்பு மிகவும் வலிமையானது என்றும், அந்த தலைப்பு நம்மை சோதித்து பார்ப்பதாகவும் கூறினார்” என பேசியுள்ளார்.


இதனைத்தொடர்ந்து அஜித்குமார் கார் ரேஸ் குறித்து மகிழ் திருமேனி, “அஜித் சார் கார் ரேஸுக்கு கிளம்புவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருந்தது. அப்போது அஜித் சார் கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீடியோவை காண்பித்தார். அந்த பயிற்சியின் போது அவருக்கு இரண்டு முறை விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அஜித் என்னிடம், எனக்கு கார் பந்தயத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் எனது பட வேலைகளை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 
ஏனென்றால் என்னை நம்பி இவ்வளவு பேர் உழைத்துள்ளனர். நான் ரேஸில் பங்கேற்கும் போது நான் அதற்கு 100 சதவிதத்தை அளிக்க வேண்டும். அப்போது எனக்கு பட வேலைகள் உள்ளது என தயக்கத்தில் இருக்கக் கூடாது என்றார். மேலும் விடாமுயற்சி திரைப்படம் தனது கரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும் என அஜித்குமார் கூறியதாகவும்” மகிழ் திருமேனி பேசியுள்ளார்.