நடிகர்கள் - தயாரிப்பாளர்கள் மோதல் - “ஸ்ட்ரைக் தீர்வாகாது” - இயக்குனர் பேரரசு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு சங்கங்கள் இணைந்து, சமீபத்தில் கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பல்வேறு அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளைத் துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தனர். மேலும் வருகிற 16ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளதால் வருகிற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம், தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. அவர் மீது எந்த புகாரும் இதுவரை நிலுவையில் இல்லை, எங்களிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது என அறிக்கை வெளியிட்டது. இரு சங்கங்களும் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையானது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “தனுஷ் மீது எந்த புகாரும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்குப் புறம்பானது. சங்க உறுப்பினர்கள் நலன் காக்க ஏற்கனவே அறிவித்த நவ. 1 முதல் சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளோம். இதற்கு நடிகர் சங்கம் தகுந்த ஒத்துழைப்பு தரும் என்ற நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இயக்குநர் பேரரசு தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக் குறித்து அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒரு இயக்குநர் சங்க பொதுச்செயலாளராக என்னுடைய கருத்து, ஸ்ட்ரைக் நடக்கக்கூடாது என்பது தான். ஸ்ட்ரைக் என்றுமே தீர்வை நோக்கிப் போகாது. பிரச்சனையைத் தான் வளர்க்கும். அதே சமயம் ஸ்ட்ரைக் நடக்கும் போது, தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். நிறைய உதவி இயக்குநர்கள் தினமும் வேலைக்குச் சென்று தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். உதவி இயக்குநர்கள் மட்டும் இல்லை. நிறையப் பேரும் இப்படித்தான். அதனால் தீர்வு என்பது, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி எல்லாமும் கூடிப் பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும். தயாரிப்பாளர்கள் இன்று சம்பாதிப்பதில்லை. அவர்களுக்கு நடிகர் சங்கம் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.