‘96’ படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க இயக்குநர் பிரேம்குமார் முடிவு..?
‘96’ படத்தின் 2-ம் பாகத்தினை உருவாக்க இயக்குநர் பிரேம்குமார் முடிவு செய்திருக்கிறார். ‘96’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘மெய்யழகன்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் கார்த்தி, அரவிந்த்சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள்.
‘மெய்யழகன்’ படத்தின் போஸ்டர்களில் முழுக்க தமிழ் வார்த்தைகள் மூலம் விளம்பரப்படுத்துவதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனிடையே, தன்னிடம் உள்ள அடுத்த படத்தின் கதைகள் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார்.அதில் ‘96’ படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையினை எழுதி வருவதாகவும், முழுமையாக எழுதியவுடனேயே விஜய் சேதுபதியை சந்தித்து கூற இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் ‘96’படத்தின் 2-ம் பாகத்தை எழுதக் கூடாது என்ற முடிவில் இருந்தேன், எழுதி முடித்தவுடன் மிகவும் பிடித்த கதையாக மாறியிருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் பிரேம்குமார்.
‘96’ படத்தின் 2-ம் பாகத்தை நான் மட்டும் முடிவு செய்ய முடியாது, அதற்கு விஜய் சேதுபதி – த்ரிஷா ஆகியோரின் தேதிகள் எல்லாம் வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் பிரேம்குமார். ‘96’படத்தின் ரசிகர்களுக்கு இந்தச் செய்தி பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. பலரும் இதனை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.