×

நடிகர் பிரசாந்திற்கு எப்போது கல்யாணம்? - மனம் திறந்த தந்தை தியாகராஜன்

 

ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கான நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், நடிகர் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.‌

இவ்விழாவில் அந்தகன் படம் உருவானது குறித்து பேசிய இயக்குநர் தியாகராஜன், "இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். முதலில் இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது.அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம், இந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம், மேலும் அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம்.மூன்று மாதத்திற்கு பிறகு ஜெயம் ராஜாவிற்கு சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்த படத்தில் பணியாற்றுகிறேன் என ஜெயம் ராஜா சொன்னார்.‌ நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன். அதன் பிறகு நான் இப்படத்தை இயக்க முடிவு செய்தேன்” என்றார்

நடிகை சிம்ரன் குறித்து பேசுகையில், "படத்தில் நாயகி கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது சிம்ரனை தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. சிம்ரனும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் ஆதரவை வழங்கினார். அவர் மேடையில் தமிழில் பேசியதை மிகவும் ரசித்தேன்” என கூறினார்.நடிகர் பிரசாந்த் குறித்து பேசுகையில், “பிரசாந்த் பியானோ வாசிப்பதாகட்டும், கண் தெரியாமல் நடிப்பதாகட்டும் அனைத்து காட்சியிலும் இயல்பாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை, ஆனால் அந்த குறையை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் பிரசாந்த் மறக்கடிக்க செய்திருந்தார்” என கூறினார்.‌

இதனைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பிரசாந்துக்கு எப்போது திருமணம் என்று கேட்டதற்கு தியாகராஜன், ”பிரசாந்தின் திருமண வாழ்க்கை தான் எனக்கு கஷ்டமான ஒன்று. நல்ல குடும்பப் பாங்கான ஒரு பெண்ணை அவரது அம்மா தேடிக்கொண்டு தான் இருக்கிறார். படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுவிட்டது. அடுத்து, பட வேலைகளை நிறுத்திவிட்டு திருமண வேலைகளை கவனிக்கப் போகிறேன்" என்று தெரிவித்தார்.