×

அவமானம், தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது - விக்னேஷ் சிவன் உருக்கம் !

 

அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது என இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

‘நானும் ரௌடிதான்’ படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு ‘போடாபோடி’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை இயக்கவிருந்தார். 

ஆனால் கதை சரியில்லை என்று தயாரிப்பு தரப்பு நிராகரித்ததால் அப்படத்திலிருந்து விலகினார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தனது அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ‘லவ் டுடே’  இயக்குனர் பிரதீப் ரெங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் விக்னேஷ் சிவன், இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் 'என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளுக்கும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது.

‘விக்கி 6’ படத்திற்காக எனது இதயத்திலிருந்து தயாராகிறேன். இந்த கடினமான நேரத்தில் என்னுடன் துணை நின்ற கடவுளுக்கும், மக்களுக்கும் நன்றி. என் மீதான உங்கள் நம்பிக்கை என்னை அடையாளம் காண மட்டுமல்ல, நெருக்கடியான நேரத்தில் வாழவும் உதவியது. தற்போது மகிழ்ச்சி இருக்கும் நான் வருங்காலத்தை நோக்கி காத்திருக்கிறேன். என் குழந்தைகளுடன் நேரம் செலவிட வாய்ப்பறித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார்.