×

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா ஸ்பந்தனா..!

 

சிம்புவின் குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  திவ்யா ஸ்பந்தனா. அதன்பிறகு இவர் அர்ஜுனின் கிரி, தனுஷின் பொல்லாதவன், சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கன்னட மொழியில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பாக 2013ஆண்டு நடந்த கர்நாடகாவின் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானகவும் இருந்துள்ளார். 

திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதையடுத்து அவரது நண்பர் ஒருவர் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவருடன் பேசியதாகவும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் திவ்யா ஸ்பந்தனா தொடர்பாக ஒரு தகவல் பரவி வந்தது. அதாவது தொழிலதிபர் ஒருவருடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சமூகவலைதளங்களில் கூறப்பட்டது. 

இந்த நிலையில் திவ்யா ஸ்பந்தனா நிச்சயதார்த்த தகவல் குறித்து தற்போது பேசியுள்ளார். இது தொடர்பான அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மீடியாக்களால் நான் பலமுறை திருமணம் செய்திருக்கிறேன். நான் திருமணம் செய்யும்போது அதைப் பற்றி உங்களிடம் தெரிவிப்பேன். தயவுசெய்து ஆதாரமற்ற செய்திகளால் வரும் வதந்திகளை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.