தீபாவளிக்கு வெளியாகும் தமிழ் படங்கள்! முழு விவரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முன்னணி நடிகர்கள் இல்லாத பிரதீப் ரங்கநாதனின் டியூட், ஹரிஷ் கல்யாணின் டீசல், துருவ் விக்ரமின் பைசன், நட்டியின் கம்பி கட்ன கதை ஆகிய நான்கு படங்கள் நாளை திரைக்கு வருகிறது.
தீபாவளி பண்டிகையில் பட்டாசு, இனிப்பு, புத்தாடைகள் என்பதை தாண்டி புதுப்படங்கள் பார்க்காவிட்டால் தீபாவளி நிறைவடையாது. தங்களின் விருப்பமான நாயகனின் படத்தை காலையிலேயே பார்த்துவிட்டு கொண்டாடும் ரசிகர்களே இருக்க முடியாது. அப்படி சில காலம் வரை கொண்ட்டாட்டமாக இருந்த தீபாவளி சமீப காலமாக எந்தவித ஆராவாரம் இல்லாமல் கலை இழந்துள்ளது. 80, 90 களில் தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், பிரபு, ராமராஜன், சத்யராஜ் உள்ளிட்ட எல்லா நடிகர்களின் படங்களும் வெளியாகும். ஒரு கட்டத்தில் அது ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என குறைந்தது. அதன்பின் ரஜினி, கமல் என மாறியது. தீபாவளிக்கு 10 படங்கள் வெளியான காலம் எல்லாம் உண்டு. காலப்போக்கில் அது விஜய், அஜித் போட்டியாக மாறிபோனது. இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் அதுவும் தீபாவளிக்கு வெளியாகி இரண்டு ரசிகர்களையும் குஷிப்படுத்தியது. ஆனால் சமீப காலமாக ரஜினி, அஜித், விஜய் போன்ற உச்ச நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாவது குறைந்து விட்டது. அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயன், கார்த்தி போன்றவர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் வழக்கம் தொடங்கியது. ஆனால் இந்த தீபாவளியை பொறுத்தவரை ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஜய் சேதுபதி, விஷால், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட எந்த நடிகரின் படமும் வெளியாகவில்லை.
இந்த தீபாவளி வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் தீபாவளியாக மாறியுள்ளது. அதன்படி துருவ் விக்ரமின் பைசன் காளமாடன், ஹரிஸ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் ஆகிய 3 படங்கள் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் கூட சேர்ந்து நட்டி நடித்துள்ள கம்பி கட்ன கதை என்ற படமும் வெளியாகிறது. கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அதனை தொடர்ந்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்ததன் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். அதன்பிறகு வெளியான டிராகன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக கதாநாயகனாக நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் டியூட். அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, நேகா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருக்க சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலையும் பிரதீப் பாடியிருக்கிறார். ஒரு கலர்புல் குடும்ப பொழுதுபோக்கு மற்றும் செண்டிமெண்ட், காமெடி கலந்த கலவையாக டியூட் வெளியாகவுள்ளது. தீபாவளிக்கு ஜாலியாக குடும்பத்துடன் சென்று பார்க்கும்படி திரைப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிரதீப் ரங்கநாதனின் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தீபாவளி ரேஸில் இந்த படம் அதிக வரவேற்பை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான படங்களின் மூலம் கவனத்தை பெறுபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். தென் மாவட்டத்தை சேர்ந்த கபடி விளையாட்டில் ஆர்வமுள்ள ஒரு இளைஞன் சமூகத்தில் என்ன பிரச்சனையை எதிர்கொள்கிறார் என்பதை இந்த படத்தில் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ். அர்ஜுனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மனத்தி கணேஷனின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்காக துருவ் கடந்த 3 வருடங்களாக உழைப்பை கொட்டியிருக்கிறார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு முதல்முறையாக மாரி செல்வராஜுடன் இணைந்து நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம் டீசல்.இதுவரை காதல் மற்றும் எதார்த்த படங்களில் கவனம் செலுத்தி வந்த ஹரிஸ் கல்யாண் முதன் முறையாக டீசல் படம் மூலம் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். கடல் வழியாக நடக்கும் டீசல் கடத்தல், அதன் பின்னணியில் இங்கும் கடத்தல் கும்பல்கள் பற்றி இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஹரிஸ் கல்யாணின் பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் டீசல் தனக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என ஹரீஸ் கல்யாண் எதிர்பார்த்து காத்திருக்கிறார். தீபாவளிக்கு படங்கள் வெளியாக தகுதி வேண்டுமா? என சமீபத்தில் ஹரிஷ் கல்யாணம் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்டி, சிங்கம் புலி உள்ளிட்டவங்க நடித்துள்ள படம் கம்பி கட்ன கதை.. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த படமும் தீபாவளி ரேஸில் துணிந்து களமிறங்கியுள்ளது.முதல் முறையாக இளம் நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு மோதவுள்ளது. இந்த ஆரோக்கியமான போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.