×

அமரன் படம் குறித்து நடிகர் சிம்பு என்ன சொன்னார் தெரியுமா... ?

 

ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிம்பு குறித்து பேசியுள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர். அதைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த தீபாவளி தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படமானது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாக உருவாகியிருந்தது. இதில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் பலராலும் பாராட்டப்பட்டனர். அதைப்போல் இப்படத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் ரஜினி, விஜய் உள்ளிட்டோரால் பாராட்டப்பட்டார். அந்த வகையில் நடிகர் சிம்புவும் ராஜ்குமார் பெரியசாமியை பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய ராஜ்குமார் பெரியசாமி, “அமரன் படத்தை பார்த்துவிட்டு சிம்பு என்னை செல்போனில் தொடர்பு கொண்டு 30 நிமிடங்கள் பேசினார். அப்போது படத்தில் நல்ல எடிட்டிங் இருந்தால் அது தெரியவே கூடாது. அதேபோல் நல்ல டைரக்ஷன் இருந்தால் அது படம் பார்க்கிற உணர்வையே ஏற்படுத்தக் கூடாது. இது வியக்கத்தக்க அனுபவமாக இருந்தது” என்று சிம்பு தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.

அத்துடன் சிம்புவும் நடிகர் விக்ரமும் எனக்கு வாழ்த்து தெரிவித்து என்னுடைய வீட்டிற்கு பூங்கொத்து அனுப்பி வைத்தனர் என்றும் கூறியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.