இந்த வார திரையங்கு & ஓடிடி ரிலீஸ் என்னென்ன படங்கள் தெரியுமா..?
இந்த வாரம் திரையரங்குகளில் ஒரு சில தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாகும் நிலையில், ஓடிடியில் பல பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகிறது
இந்த வாரம் தமிழ் சினிமாவில் டப்பிங் ரீரிலீஸ் படங்கள் உட்பட 10 திரைப்படங்கள் வெளியாகிறது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991இல் வெளியான ’குணா’ திரைப்படம் நாளை (நவ.29) ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சொர்க்க வாசல் ரசிகர்களுக்கு பரிட்சயமான திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகிறது.
சொர்க்க வாசல்: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து பின்னர் கதாநாயகன், இயக்குநர் என உயர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள திரைப்படம் ’சொர்க்க வாசல்’.
ஆர்ஜே பாலாஜி சிறைக் கைதியாக நடித்துள்ள இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
பைரதி ரணங்கள் (Bhairathi ranangal): சிவராஜ் நடிப்பில் பைரதி ரணங்கல் கன்னட திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு நாளை (நவ.29) வெளியாகிறது. இத்திரைப்படம் முன்னதாக சிவராஜ்குமார் நடித்த Mufti படத்தின் முன்கதையாகும். mufti திரைப்படம் தமிழில் ’பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அந்த படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் பைரதி ரணங்கள் திரைப்படம் கன்னட மொழியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் பரமன், சாதுவன், டப்பாங்குத்து, மாயன், திரும்பிபார், சைலண்ட் ஆகிய தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் நாளை வெளியாகிறது
ஓடிடி ரிலீஸ் படங்கள்
பிரதர்: ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பிரதர்’. தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ’மக்காமிஷி’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் நாளை (நவ.29) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அந்தகன்: பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கிய திரைப்படம் ’அந்தகன்’. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படம் தமிழில் ’அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பிரசாந்த், சிம்ரன், கார்த்தி, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் ’அந்தகன்’ நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
லக்கி பாஸ்கர்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படம் ’லக்கி பாஸ்கர்’. வங்கி கொள்ளை தொடர்பான த்ரில்லர் படமாக வெளிவந்த லக்கி பாஸ்கர் மாபெரும் வெற்றி பெற்றது. தியேட்டர்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் இன்று (நவ.28) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியுள்ளது.
பிளடி பெக்கர்: இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் என்பவரது இயக்கத்தில் கவின் நடித்து இந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ’பிளடி பெக்கர்’. காமெடி கலந்த படமாக உருவான ’பிளடி பெக்கர்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படமும் நாளை (நவ.29) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் விக்ராந்த், ரித்விகா நடித்த ’தீபாவளி போனஸ்’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும், ’பாராசூட்’ என்ற இணைய தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நாளை வெளியாகிறது.